ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Monday, November 25, 2013

ப்ரசன்ன ஜோதிடம்

            பிற ஆருட முறைகளில் ஜோதிடர் பலன் கூறினால் தெய்வீக ஆருடத்தில் தெய்வமே பலன் கூறும். அப்படி பட்ட தெய்வீக ஆருட முறையான தேவ ப்ரசன்னத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

            முன்பு ஒரு காலத்தில் படைக்கப்பட்டு, இறைவனால் அருளப்பட்டு, ரிஷிகளால் காகப்பட்ட இந்த தெய்வீக முறை பலரின் கைகளில் மாட்டி மறைந்து கிடைக்கிறது. தேவப்பிரசன்னம் என்பதில் இரண்டு வார்த்தைகள் உண்டு. முதல் வார்த்தை தேவம் மற்றது ப்ரசன்னம். தேவம் என்றால் தெய்வீகம் என அர்த்தப்படுத்தலாம். தெய்வீகம் என்ற சொல்லை விளக்குவதை விட உணர்ந்தால் மட்டுமே புரியும். ப்ரசன்னம் என்ற வார்த்தையை விளக்குவது எளிது.

ப்ரசன்ன என்ற வடமொழி சொல்லுக்கு கேள்வி என அர்த்தம். விடை தெரிய முற்படும் கேள்விக்கு ப்ரசன்ன என மொழி பெயர்க்கலாம். வேதத்தில் உள்ள ஒரு உபநிஷத்தின் பெயர் ப்ரசன்ன உபநிஷத். கேள்விகளால் தூண்டப்பட்டு இறை உண்மை விளக்கப்படுவதால் உபநிஷத் இப்பெயர் பெற்றது.

ஒருவர் தன் வாழ்வில் குழப்பத்துடன் நம் முன் வரும் பொழுது என்னப்பா உனக்கு பிரச்சனைஎன பேச்சு வழக்கில் கேட்பார்கள் அல்லவா? அதுபோல வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை ஜோதிடர்களிடம் கூறும் பொழுது அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு பலன் சொல்லும் ஜோதிட சூட்சமத்திற்கு பிரசன்னம் என பெயர்.

பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்க்கையின் அனைத்து பலன்கள் பார்ப்பது போல இல்லாமல், ஒரு கேள்வி அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து ஒரு ஜாதகம் பார்ப்பது என்பதே ப்ரசன்ன ஜோதிடம் என்பதாகும்.

ஒரு கேள்விக்கு ஒரு ஜாதகம் என்றேன் அல்லவா? அடுத்த கேள்வி கேட்கும் பொழுது முன்பு இருந்த ஜாதகத்தை விட்டு புதிய கேள்வி கேட்ட நேரத்தில் மீண்டும் ஜாதகம் கணிப்பார்கள். ஆக கேள்வி வர வர ஜாதகம் மாறும்..!

பிறந்த நேரத்தை கொடுத்தாலே ஜாதகம் கணித்து பதில் சொல்லலாமே ஏன் ஒவ்வொரு கேள்விக்கு ஜாதகம் போட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். வெளிப்படையாக கூறவேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பிறப்பு ஜாதகத்தில் பலன் கூற முடியாது. ஆம் இது முற்றிலும் உண்மை. உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்.

நான் வீடு வாங்குவேனா என கேட்டால் பிறப்பு ஜாதகத்தில் கூறிவிடலாம். ஆனால் நான் கும்பகோணத்தில் வாங்குவேனா இல்லை கோளப்பாக்கத்தில் வாங்குவேனா என கேட்டால் ப்ரசன்னம் தான் ஒரே வழி.

எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா என கேட்டால் பிறப்பு ஜாதகம் போதும், இதுவே எனக்கு பதவி உயர்வு உதவி மேலாளராகவா அல்லது கிளை மேலாளராகவா என கேட்டால் பிறப்பு ஜாதகம் வழி கூறாது. பிரசன்ன ரீதியாகவே பார்க்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலே கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றிப்பெறும் என கேள்வி எழுந்தால் இரு அணியில் விளையாடும் 22 நபர்களின் ஜாதகத்தை கணித்தா பலன் கூற முடியும்? அவ்வாறு செய்தால் மேட்சே முடிந்துவிடும். இதெற்கெல்லாம் பயன்படுவது பிரசன்ன ஜோதிடமே ஆகும்.

இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால் பிரசன்ன ஜோதிடத்தில் கூற முடியாததே எதுவும் இல்லை, அனைத்துக்கும் ஜோதிட பலன் கூற முடியும்.

பிறப்பு ஜாதகத்தில் பிறந்த நேரம் தவறாக இருக்கலாம். நமக்கும் துல்லியமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரசன்னம் என்பது நீங்கள் ஜோதிடரிடம் கேள்வி கேட்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தை துல்லியமாக கூற முடியும். அதனால் பலனும் துல்லியமாக வரும்.

மின்சாரம் எப்பொழுது வரும்? கையில் மறைத்து வைக்கப்பட்ட பொருள் என்ன? நாணயத்தை சுண்டினால் தலை விழுமா பூவா? இவை எல்லாம் பிரசன்னத்தில் முன்பே கூற முடியும். அதுவும் பொதுவாக இல்லை. மிக மிக துல்லியமாக, மைக்ரோ அளவில் கூற முடியும்.

பிரசன்ன ஜோதிடம் பல ஜோதிடர்களுக்கு தெரியாது. இதனால் ஜோதிடத்தில் முழுமை பெறாமல் இருக்கிறார்கள். கேரள ஜோதிடம் புகழ்பெற்று இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம் மட்டும் தான் தெரியும்...!

பிரசன்ன ஜோதிடத்தின் துல்லியம் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் கிடையாது. பராசரர், வராஹ மிஹிரர், காளி தாசர் இவர்கள் எல்லாம் பிரசன்ன ஜோதிடத்தில் திறன்மிகுந்தவர்களாக இருந்தவர்கள்.

இப்படிப்பட்ட மிக சக்தி வாய்ந்த பிரசன்ன ஜோதிடத்துடன் இறை சக்தி இணைந்தால் அதன் பெயர் தேவப்பிரசன்னம்...!

தேவப்பிரசன்னம் எப்படி பார்க்கப்படுகிறது?
கோயில் திருவிழாவிற்கு முன் ஒவ்வொரு வருடமும் தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை வழக்கத்தில் உண்டு. இன்றும் பல கோவில்களில் பார்க்கப்படுகிறது. தேவப்பிரசன்னம் மூலம் ஜோதிடர்கள் பல்வேறு விஷயங்களை மக்களுக்கு இறையாற்றல் மூலமாக கணித்து சொல்லி இருக்கிறார்கள்.

தேவப்ரசன்னத்தின் தன்மையை உணர ஓர் உண்மை சம்பவத்தை கூறுகிறேன். தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒரு பிரபல கோவிலில் விசித்திரமான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அங்கே திருவிழாவிற்கு முன் கொடி ஏற்றம் நடைபெறும் சமயம் கொடி ஏற்றுபவர் சுருண்டு விழுந்து இறந்துவிடுவார்...!

இதனால் திருவிழா நடக்காமல் தடைபடும். அடுத்த சிலவருடம் கழித்து மீண்டும் முயற்சி செய்வார்கள். அவ்வாறே கொடி ஏற்றுபவர் இறந்துவிடுவார். ஒன்று அல்ல இரண்டு அல்ல நான்கு மரணம் பார்த்த பிறகு அந்த கோவிலுக்குள் செல்லவே அனைவரும் பயந்து ஒதுங்கினார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் மக்கள் மீண்டும் திருவிழா கொண்டாட முன் வந்தார்கள். அதற்கு முன் சிலரின் வழிகாட்டுதலில் தேவப்பிரசன்னம் பார்த்துவிடுவது நல்லது என முடிவு செய்தார்கள். தெய்வம் தங்கள் மேல் கோபமாக இருக்கிறது போல என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் என்ன என தெரிந்துகொள்ளவும் ஆர்வமாய் இருந்தார்கள்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாளும் வந்தது. தேவப்பிரசன்னம் பார்த்து விட்டு அந்த ஜோதிடர்கள் குழு தலைவர் சொன்னார் அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!

கிராம மக்கள் திகைத்தார்கள். உங்களை போல....
அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!என அந்த ஜோதிடர் கூறியவுடன் ஊர் மக்கள் திகைத்தார்கள்.

நீங்கள் வெளியூரை சேர்ந்தவர் கொடி ஏற்றும் பொழுது ஏதேனும் விபரீதம் நடந்தால் எங்கள் ஊருக்கு அது அவப்பெயராக ஆகிவிடும். மேலும் சாஸ்திரம் கற்ற உங்களுக்கு விபரீதம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஊர் முக்கியஸ்தர்கள் கூறினார்கள்.

நானாக இம்முடிவை எடுக்கவில்லை. ஜோதிட சாஸ்திரத்தை பயன்படுத்தியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இறைவனின் சன்னிதியில் நடக்கும் இறப்புக்கு ஒரு விடையை நாம் கண்டறிய வேண்டும். என்னை கொடியேற்ற அனுமதியுங்கள்என ஜோதிடர் கூறினார்.

திருவிழா கொடியேற்றும் நாளும் வந்தது. கோவில் புதுபொலிவுடன் காட்சியளிக்கப்பட்டது. ஊர் மக்கள் பக்தியுடனும் ஒருவித பய உணர்வுடன் குழுமி இருந்தனர். கோவிலின் உள்ளே கொடி பூஜை செய்யப்பட்டது. செண்டை மேழம் முழுங்க, துந்துபிகளும் கொம்பும் ஒலிக்க கொடி கோவிலின் பலிபீடம் அருகே கொண்டு வரப்பட்டது.
கொடியேற்றும் தருணம் வந்தது. மேழம் உச்ச நிலையில் வாசிக்கப்பட்டது. கொடிமரத்தையும் கொடியையும் ஜோதிடர் விழுந்து வணங்கினார்.

வணங்கி எழுந்தவர் கொடியேற்றாமல் திடிரென செண்டை மேழம் வாசிக்கும் குழுவில் இருந்த ஒரு முதியவரின் இரு கைகளை பிடித்துக் கொண்டார். மங்கள ஒலியுடன் இருந்த கோவில் திடீரென நிசப்தமாகியது.

என்ன நடக்கிறது என மக்கள் புரியாமல் பார்க்க.. ஜோதிடர் அந்த முதியவரை பார்த்து கேட்டார், “ஏன் இப்படி செய்கிறீகள்? இறைவன் சன்னிதிக்கு முன் ஏன் இந்த விபரீதம்? உண்மையை இறைவன் முன்னால் கூறுங்கள்

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த முதியவர் பெருங்குரல் எடுத்து அழுதார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த முதியவர் உண்மையை கூறத் துவங்கினார். 
இக்கோவிலில் சிறுவயது முதல் நான் மேழம் வாசிக்கிறேன். என் பன்னிரெண்டு வயது முதல் செண்டை மேழம் கற்று வந்தேன். செண்டை தாளத்தில் ஒருவிதான வாசிப்பு முறையை என் குருவிடம் கற்றேன். . செண்டை வாசிக்கும் பொழுது எந்த நிகழ்ச்சிக்கு வாசிக்கிறோமோ அந்த நிகழ்ச்சியின் தலைவருக்கு (கர்த்தா) இரத்த நாளங்களில் ஒருவித தாளம் ஏற்பட்டு இறுக்கம் அடைந்து முடிவில் இருதயம் செயல் இழந்து இறந்து விடுவார். இசையின் மூலம் தற்காப்பு கலையை ரகசிய பயிற்சியாக கற்றுக்கொண்டேன். என் சிறிய வயதில் அதை சோதிக்க எண்ணி இக்கோவில் கொடியேற்றத்தில் பயன்படுத்தினேன். என் வாசிப்பால் ஒரு விளைவு ஏற்படுவதை கண்டு எனக்குள் ஒருவித பெருமிதம் அடைந்தேன்.

யாரும் இதை கண்டு பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் இங்கே செய்து பார்த்தேன். என் வாசிப்பே பலரது மரணத்திற்கு காரணமாக இருந்தது. இனி இதுபோல செய்ய மாட்டேன், இனிவரும் காலத்தில் யாருக்கும் இம்முறையை கற்றுக்கொடுக்க மாட்டேன். இறைவனும் ஊர்மக்களும் என்னை மன்னிக்க வேண்டும். எனக் கூறு ஊர் மக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.

அவரை தவிர்த்து பிறர் வாசிக்க, கொடியேற்றப்பட்டது. திருவிழா துவங்கியது. ஜோதிடரின் திறமையை அனைவரும் பாராட்டினார்கள். இது எப்படி சாத்தியம் என வியப்புடன் ஜோதிடரிடம் கேட்டார்கள்.

தேவப்பிரசன்னம் வைக்கும் பொழுது சத்ருஸ்தானம் மற்றும் அபஸ்தானம் என்னும் இடத்தில் மாந்தியுடன் சனி என்ற கிரகம் அமர்ந்து கேடு பலனை அளித்து வந்தது. சனி அமர்ந்த ராசி காற்று ராசி இவைகளை முடிவு செய்து பார்க்கும் பொழுது முதிய வயதுடைய(சனி) மேழம்(காற்று-ஒலி) வாசிக்கும் ஒருவரால் அமங்கலம் ஏற்படுகிறது என்பதை கண்டுகொண்டேன். உதய லக்னத்திற்கு சனி நான்காம் இடத்தில் இருந்தது என்பதையும் குறித்துக் கொண்டேன்.

கொடியேற்றும் நாளில் பலிபீடத்தின் அருகே நின்று வாசித்தவர்களில் ஒரு முதியவர் நான்காவது நபராக நின்று வாசித்துக் கொண்டிருந்தார். அவர் இச்செயலுக்கு காரணம் என பிரசன்ன ரீதியாக முடிவு செய்து கண்டறிந்தேன்என்றார்.

பதினைந்து வருடத்திற்கு பிறகு ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினார்கள்.

தேவப்பிரசன்னம் என்பது ஒரே ஒரு ஜோதிடர் மட்டும் பார்க்கப்படும் ஜோதிடம் அல்ல. குறைந்தபட்சம் ஐந்து ஜோதிடர்களாவது இருப்பார்கள். மேலும் அந்த ஜோதிடர்கள் எல்லாம் மிகப்பெரிய ஜோதிடர்களாகவும் சாஸ்திரம் நன்கு கற்றவர்களாகவும் இருப்பார்கள். இக்குழு ஜோதிடர்கள் தவிர அவர்களுக்கு உதவியாளர்கள், அவ்வுதவியாளர்களுக்கு உதவியாளர்கள் என ஜோதிட பட்டாளமே இணைந்து ஒரு கோவிலுக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும்.

இக்குழுவுக்கு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து அவர் முன்னிலையில் பிரசன்ன ஜாதகத்தில் கண்ட விஷயங்களை நான்கு நாட்கள் விவாதிப்பார்கள் பிறகே கருத்துக்களை வெளியிடுவார்கள்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை மிகவும் வித்தியாசமானது. பல்வேறு வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தழுவி பார்க்கப்படும் ஜோதிட முறையாகும். சாதாரண மனிதனுக்கே ஜோதிடம் பார்க்க ஜோதிடர் எத்தனையோ சூத்திரங்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது அல்லவா? அப்படிப் பார்த்தால் கடவுளுக்கே ஜோதிடம் பார்க்க எவ்வளவு ஆற்றலுடன் பார்க்க வேண்டும் என யோசித்துப் பாருங்கள்.

ஜோதிடரிடம் நாம் ஆருடம் பார்க்க செல்லும் பொழுது நாம் வரும் நேரத்தை கொண்டு அவர் கிரகங்களை கணிப்பார். நாம் அவரின் இடம் விட்டு அகன்றதும் ஜோதிடர் நம்மை பற்றிய விஷயங்களை விட்டு அடுத்தவருக்கு ஜோதிடர் பார்ப்பார்.

ஆனால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்கள் ஜோதிடத்தை கோவில்களில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்பதி நியதி. எளிமையாக சொல்லுவதானால் மனிதன் ஜோதிடரை தேடி செல்ல வேண்டும், தேவப்பிரசன்னத்தில் ஜோதிடர் கடவுளை தேடிப்போக வேண்டும்...!

கோவிலை நோக்கி பிரசன்னம் பார்க்க வீட்டை விட்டு கிளம்பும் நேரம், அச்சமயம் நடக்கும் சம்பவங்கள் (நிமித்தம்) துவங்கி கோவிலில் பிரசன்னம் பார்த்துவிட்டு, வீடு வந்து சேரும் வரை ஜோதிடர் அனைத்தையும் குறிப்பு எடுத்துக்கொள்வார். அவர் வீடு முதல் வீடு வரை நடந்த நிகழ்வுகள் கோவிலில் ஏற்பட்ட ஆருடம் இவை அனைத்தையும் ஒன்றினைத்து அடுத்த நாள் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்.

இதில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவெனில் தேவப்பிரசன்னம் குழுவாகத்தான் பார்ப்பார்கள் என்றேன் அல்லவா? அவ்வாறு குழுவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் வீடு முதல் வீடு வரை நிகழ்வுகளை கவனிப்பார்கள். வெவ்வேறு ஊரில் இருந்து வந்து செல்லும் ஜோதிடர்களுக்கு, அடுத்த நாள் அனைவரும் கூடி விவாதிக்கும் பொழுது எல்லோருக்கும் நடந்த சம்பவம் மிகச்சரியாக ஒன்று போலவே இருக்கும். அனைவரும் பார்த்தது, கேட்டது, பேசியது என ஏதோ புரோக்கிராம் செய்தது போல இருக்கும்...!

நிமித்த அடிப்படையில் அனைவருக்கும் ஒன்றுபோலவே இருப்பதை கொண்டு இயற்கை அனைவருக்கும் பொதுவாக ஏதோ ஒரு கருத்தை கூற விரும்புகிறது என கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளுவார்கள்.

கோவிலுக்கு செல்லும் பொழுது நடக்கும் நிகழ்வுகள் இறந்தகாலத்தையும், கோவிலில் கிடைக்கும் பிரசன்னம் நிகழ்காலத்தையும், கோவில் முதல் வீடு வரை வரும் நேரம் நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தையும் குறிக்கும் என்பது தேவப்பிரசன்னத்தின் அடிப்படை சூத்திரமாகும்.

உதாரணமாக கோவிலுக்கும் செல்லும் நேரத்தில் அசிங்கமான அருவெறுப்பான விஷயங்களை காண நேர்ந்தால் கோவிலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவமானங்கள் நடந்து உள்ளது என்று குறித்துக்கொள்வார்கள். கோவிலில் கிடைக்கும் பிரசன்னத்தின் விடை முன்பு நடந்த செயலால் தற்சமயம் இறைநிலை பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது எவ்வாறு இருக்கிறது என்பதை உணர முடியும். பின்பு வீட்டிற்கு வரும் சூழல் நடக்கும் சம்பவங்கள் இனிவரும் காலத்தில் இறை நிலை கோவிலில் எவ்வாறு மேம்படுத்த முடியும் அல்லது நிலைபடுத்த முடியும் என்பதை காட்டும்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாள் பிறகு இரு நாட்கள் எடுத்துக்கொண்டு ஜோதிட குழு விவாதம் செய்யும். பிறகு அவர்கள் செய்த ஆய்வை பொதுமக்கள் முன்னிலையில் மட்டுமே வெளியிட வேண்டும் என்பது நியதி. கோவில் நிர்வாகத்திடமோ அல்லது கோவில் சார்ந்த ஆட்களிடமோ பிரசன்ன பலன்களை தனியே கூறக்கூடாது. அவர்களையும் பொதுமக்களுடன் நிற்க சொல்லியே கூற வேண்டும் என்பது தேவப்பிரசன்னம் கூறும் நியதியாகும்.

ஜோதிடர்கள் குழு கூறும் பலன்களை பொதுமக்களுக்குள் அமர்ந்திருக்கும் ஜோதிடம் தெரிந்தவர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள். அதற்கு ஜோதிட குழு தக்க பதில் கூற வேண்டும்.

நாங்கள் தேவப்பிரசன்னமே பார்க்கும் ஆற்றல் கொண்டவர்கள் என ஆணவம் இல்லாமல், பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு மிகப்பணிவுடன் பதில் கூற வேண்டும்.

லக்னத்தில் இவ்வாறு கிரகம் இருந்ததற்கு இன்ன பலன் என நீங்கள் கூறுகிறீர்கள் ஏன் இப்பலன் இவ்வாறு இருக்கக்கூடாது என ஒருவர் கேள்வி எழுப்பினால், ஏன் அவ்வாறு செயல்படாது என மிகவும் தன்மையாக விளக்க வேண்டும்.

ஜாதக சக்கரத்தில் பன்னிரெண்டு வீடுகள் இருப்பது நீங்கள் பார்த்திருக்கலாம். மனிதனுக்கு பன்னிரெண்டு வீடுகளில் ஏற்படும் பலன்களை ஜோதிடர் ஆய்வு செய்வார். லக்னம், தனம், தைரியம், சுகம் என பல்வேறு தன்மைகளில் ஜோதிடம் மனித வாழ்க்கையை பன்னிரெண்டு வகையான அடிப்படையில் பிரிக்கிறது.

தேவப்பிரசன்னம் செய்ய முதலில் யாகங்கள் செய்து, ஜாதக சக்கரத்தை கோவிலின் வடக்கு பகுதியில் வரைந்து கொள்வார்கள். பிறகு இறைவனை ஜாதக சக்கரத்தின் மையத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அச்சமயம் கோவில் கருவறையை பூட்டிவிடுவார்கள். இறை ஆற்றல் ஜாதக சக்கரத்தில் இருக்கும் அதனால் கருவறையை மூடிவிடும் சம்ப்பிரதாயம் உண்டு.

ஓம் என ஒரு பக்கம் எழுதப்பட்ட தங்கத்தால் ஆன ஒரு காசு, சில பூக்கள் மற்றும் அக்‌ஷதை இவற்றை ஒரு குழந்தையின் கையில் அளிப்பார்கள். கூட்டத்தில் உள்ள 11 வயதுக்கு உட்பட்ட குழந்தையாக தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் கையில் கொடுத்து 12 ராசி கட்டங்களில் ஏதேனும் ஒரு ராசிகட்டத்தில் வைக்க சொல்லுவார்கள். மூன்று முறை ராசி கட்டத்தை வலம் வந்து அந்த குழந்தை எந்த ராசியில் கையில் உள்ள காசை
வைக்கிறதோ அதுவே லக்னம் என கொள்ளப்படும்.

காசு இருக்கும் ராசி முதல் வீடாக கொண்டு பண்ணிரண்டு ராசிகளின் பலன்களை கிரகிப்பார்கள். இச்செயலை ஒரு பல ஜோதிடர்கள் கொண்ட குழு செய்வார்கள்.


கேரளாவில் இன்றளவும் பல்வேறு இடங்களில் தேவப்பிரசன்னம் சிறப்பாக செயல்படுகிறது. பிரபலமான கோவில் என்றால் குருவாயூரை உதாரணமாக கூறலாம்